கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ள பாடகி சின்மயிக்கு ஆதரவாக சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பாலியல் புகார் கூறியிருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சந்தியாமேனன்.
இவர் தனது டுவிட்டரில் “பாடலாசிரியர் வைரமுத்து ஒரு பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார்” என்று தகவல் வெளியிட்டு இருந்தார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.
உடனே பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என்று சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. இது உண்மை தான். நம்புங்கள் என்று பதில் அளித்த சின்மயி இறுதியில் தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என்று டுவிட்டரில் அதிர்ச்சி தகவல் வெளியிட்டார்.
சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான “விழமாட்டோம்” என்ற நிகழ்ச்சியில் பாடுவதற்காக நான் சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அனைவரும் சென்றுவிட்ட நிலையில் என்னையும், எனது தாயையும் மட்டும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் இருக்கச்சொன்னார்.
எதற்கு என்று கேட்ட போது, வைரமுத்துவை ஓட்டலில் போய் பாருங்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நாங்கள் கோபத்துடன் மறுத்துவிட்டு உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.