கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக இன்று பாடகி சின்மயி தனது முகநூல் நேரலையில் விரிவாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சுவிட்சர்லாந்தில் நடந்த வி‌ஷயத்தை நான் தாமதமாக சொன்னதற்கு காரணம் உண்டு. திருமணம் முடியும் வரை என்னை என் தாயார் பார்த்துகொண்டார். திருமணத்துக்கு பின் அவர் ஓய்வெடுத்து வருகிறார். இது அனைவருக்குமே தெரியும்.
பொதுவாக வெளிநாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் சிலரால் பல்வேறு பிரச்சினைகள் உண்டாகும். நடிகைகளிடம் கேட்டால் நிறைய வெளிவரும். பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு மிரட்டுவார்கள், கைதி போல நடத்துவார்கள். பாலியல் வன்முறை மட்டுமல்லாமல் இன்னும் பல கொடுமைகள் நடக்கும்.
நான் தந்தையில்லாமல் வளர்ந்தவள். 10-ம் வகுப்புக்கு பின் கல்லூரிக்கு போகவில்லை. தபாலில் படித்து முடித்தேன். கன்னத்தில் முத்த மிட்டால் ரிலீசுக்கு பிறகு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். நான் பாட வேண்டிய நேரத்தில் என்னுடைய நிகழ்ச்சியை ரத்து செய்தார்கள். அப்போது நான் ஒரு சிறிய பாடலை பாடினேன். பாடி முடித்ததும் என்னை தள்ளிவிட்டார்கள். கீழே விழுந்தேன்.
இது எல்லோருக்கும் தெரியும். அப்போது வைரமுத்து என் தாயாருக்கு போன் பண்ணி நலம் விசாரித்தார். நான் அவர்மீது வைத்திருந்த மதிப்பு அதிகமானது.
சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன்.
எனக்கு ஜெர்மன் மொழி நன்றாக தெரியும். நாங்கள் சுரேஷ் வீட்டில் பாதுகாப்புக்காகவும் சுரேஷுக்கு செலவு வைக்க வேண்டாம் என்பதற்காகவும் அவர் வீட்டில் தங்கினோம். சுரேஷ் தன் சொந்த மகளையே வைரமுத்துவை பார்க்க தனியாக அனுப்ப தயங்கியது நினைவிருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.
அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை.
இது அந்த நிகழ்ச்சி தொடர்பான அனைவருக்குமே தெரியும். இருந்தும் ஏன் மறைக்க முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை.
அப்போதே ஏன் புகார் அளிக்கவில்லை என்று கேள்வி எழுகிறது. இப்போதே நான் சொல்வதை நம்பாத இந்த தமிழ் சமூகம் அப்போது சொல்லியிருந்தாலும் ஒப்புக் கொள்ளவா போகிறது? அப்போது சில மீடியாக்கள் தான் இருந்தன. நான் கூறியிருந்தால் அது வெளியிலேயே வந்திருக்காது.
இப்போது தான் பாலியல் தொல்லைகள் பற்றி அதிகமாக பேசத் தொடங்கியிருக்கிறோம். நிலைமை மாறிக்கொண்டே வருவதால் பெண்கள் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். என்னை அரசியல் கட்சியுடன் இணைத்து பேசுகிறார்கள். நான் அரசியல் கட்சி சார்பற்றவள். ஆதார் கார்டு முதல் பணமதிப்பிழப்பு விவகரம் வரை எதிர்த்து குரல் கொடுத்துள்ளேன்.
திருமணத்தில் வைரமுத்துவிடம் ஆசி வாங்கியதை கிண்டல் செய்கிறார்கள். திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க பட்டியல் போடும் போது சினிமா பிஆர்.ஓக்கள் முதல் பெயராக வைரமுத்து பெயரைத் தான் சொல்வார்கள். நான் வேண்டாம் என்று சொன்னால் அது தவறாகிவிடும். என்னைப் போல பல பாடகிகள் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அதுபற்றி தைரியமாக வெளியில் சொல்ல முன்வரவேண்டும்.
ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் ஐயா பேசும்போது தான் மற்ற நிகழ்ச்சிகளை புறக்கணித்துவிட்டு வைரமுத்துவுக்காக வந்ததாக கூறினார். இந்த அளவுக்கு அரசியல் பலமிக்க ஒருவரை எதிர்ப்பது என்பது முடியாத காரியம் தான்.
எனது ஒழுக்கத்தை பற்றி பேசுகிறார்கள். நான் ஒழுக்கமானவள் தான். இந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் பயப்படாமல் தான் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளேன்.
நான் தனி ஆள் இல்லை. என்னைப் போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் சேர்த்தே குரல் கொடுக்கிறேன். ‘மீ டூ’ மூலம் கற்பழிப்பு புகார்கள் கூட வெளியில் வருகின்றன. அது வழக்காக மாறி இருக்கிறது.
பெண்கள் சமூகத்தில் உடன் பழகும் பல ஆண்கள் மூலம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள். அதை அவர்கள் வெளிப்படுத்த நாம் இடம் கொடுப்பதில்லை. ஆண்களுக்கு கூட சிறுவர்களாக இருந்தபோது தொல்லைக்கு ஆளாகி உள்ளனர். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு, சிறுமிகளுக்கு அதிகமாக நடக்கிறது. இது தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்.